×

தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகளுக்கான கடனுதவி ஆணைகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிப் பயனாளிகள் பாராட்டினர்

சென்னை: 213 தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்கள் ஆக்கிய புரட்சிகரமான சாதனைமற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகளுக்கான கடனுதவி ஆணைகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிப் பயனாளிகள் பாராட்டினர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான புரட்சிகரமான நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார்கள்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் நேரடியாகக் கழிவு நீர் அகற்றும் பணி செய்வதைத் தவிர்க்கும் பொருட்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 50 விழுக்காடு மானியமாகவும், புதிய தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் இதர பிரிவினருக்குத் திட்ட மதிப்பீட்டில் 40 விழுக்காடு மானியமாகவும், 61601 மொத்தம் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு 125.86 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 61.29 கோடி ரூபாய் மானியமாக வழங்க முதலமைச்சர் அவர்களால் முடிவுசெய்யப்பட்டு அதற்குரிய அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்கள்.

* முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பயனாளி உதயகுமார்

என் பெயர் உதயகுமார். நான் சென்னை குடிநீர் வாரியத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிகிறேன். எனக்குச் சொந்தமாக ஜெட் மோட்டார் வண்டி கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சர் இன்று எங்களுக்கு இந்த வண்டியை வழங்கியுள்ளார்கள். ஜெட் மோட்டார் வண்டி வாங்குவது என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு எங்களால் இந்த வண்டியை வாங்கவே முடியாது. இந்த வண்டியின் விலை 63 இலட்சம் ரூபாய். இதில் 30 இலட்சம் ரூபாயை எங்களுக்கு மானியமாகக் கொடுத்து, இந்த வண்டியை வழங்குகிறார்கள். இதை எங்களுக்குக் கொடுத்த முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பயனாளி சரோஜினி

என் பெயர் சரோஜினி என் கணவர் துப்புரவு பணி செய்து வந்தார். அவர் கழிவுநீர் சுத்தம் செய்யும் வேலை செய்தபோது இறந்துவிட்டார். நான் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலமைச்சர் ஐயா அவர்கள் எனக்கு இப்போது கழிவுநீர் மோட்டார் வண்டியை வழங்கினார்கள். இதனால் பல உயிர்கள் பாதுகாக்கப்படும். இந்த வண்டி மூலமாக என் வாழ்வு செழிப்பாக இருக்கும் என நம்புகிறேன். எனக்கு உதவி செய்த முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இவர்களைப்போலவே கழிவு நீர் சுத்தம் செய்யும் ஜெட்மோட்டார் வண்டிகளைப் பெற்ற பயனாளிகள் அனைவரும் தங்களை சுயதொழில் முதலாளிகளாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நன்றியுடன் வணங்கி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

The post தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகளுக்கான கடனுதவி ஆணைகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிப் பயனாளிகள் பாராட்டினர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,MLA ,K. ,MINISTER ,MU. ,K. Stalin ,First Minister ,M.O. ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில்...